இன்னாத கூறல்
  • பத்திகள்
  • இலக்கியம்-பகிர்வுகள்
  • களம்
  • இவன்...
I am a Tamil Queer 10/31/2010
4 Comments
 

CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து

"Toronto mayoral campaign ends on a hateful note" என்ற Globe and Mail தலையங்கம் சாலப்பொருந்தும், Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:

This is another example of why the effects of Canada multiculturalism and immigration policies must be studied regarding how they affect gays/lesbians and women already living here. Frankly, I don't want a country ruled by superstitions imported from the third world.

மேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
சர்ச்சையின் பின்னணி
2003 ம் வருடமே தற்போதைய நகரபிதா டேவிட் மில்லர் (நவம்பர் 30 வரை அவரே) மூன்றாம் முறையாக நகரபிதாத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நேரத்தில் இருந்தே 2010 டிசம்பர் 1ல் நகரபிதாவாகப் பதவியேற்கப் பலர் போட்டிபோட்டார்கள். ஜனவரி 4, 2010 தொடங்கி செப்டெம்பர் 10ம் திகதி வரைக்கும் வேட்பு மனுக்கள் இந்தப் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நகரபிதா பதவிக்கு மொத்தம் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். அதில் 13 பேர் தம்முடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் ரொரொன்ரோ மாநகரப் போக்குவரத்துச் சபையின் அவைத்தலைவராக இருந்த அடம் ஜியாம்ப்ரோன் முக்கியமானவர். ஆரம்பக் கணிப்புகளில் இரண்டாம் நிலையில் இருந்த இவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வேட்பு மனுவை மீளப் பெற்றுக்கொண்டார். சேரா தொம்சன் மற்றும் ரோக்கோ ரொஸ்ஸி ஆகிய இருவரும் மீளளிப்பு நாட்களின் பின்னதாக தங்களின் பிரசாரத்தை இடைநிறுத்தி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இறுதியில் உதிரி வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டு இந்த நகரபிதா தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியது.

ஜோர்ஜ் ஸ்மிதமன் (George Smitherman)
ஒன்ராரியோ சட்டசபையின் மத்திய ரொரொன்ரோ  தேர்தல் தொகுதியின் உறுப்பினராக 1999 தொடக்கம் 2010 வரை பணியாற்றியவர். லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். ஒன்ராரியோ முதல்வர் டால்ற்றன் மக்குய்ன்ரியின் வலது கரம் என்று அழைக்கப்படுபவர். Furious George என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்மிதமன் தன்னை வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக்கொண்டுதான் அரசியலில் ஈடுபட்டார். ஓக்ஸ்ட் 5, 2007 அன்று தன்னுடைய துணையான கிறிஸ்தோபர் பலேஸோவை மணமுடித்த இவர், மைக்கேல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

றொப் போ(f)ர்ட் (Rob Ford)
ரொரொன்ரோ நகராட்சி மன்றத்தில் எற்றோபிக்கோ வடக்கு தொகுதியின் ஊறுப்பினரான மார்ச் 26 ல் போட்டியாளராக வேட்புமனுத் தாக்கல் செய்து தன்னுடைய பிரசாரத்தை ஆரம்பித்த நாள்முதல் அதுவரை முன்னணி வேட்பாளராக இருந்த ஸ்மிதமனை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளினார். AM640 Radio வில் வருகிற John Oakley Show இல் நகரசபை உறுப்பினர்களின் அசட்டையான நடத்தைகளை விமர்சிப்பதில் பலருக்கும் தெரிந்தவராக இருந்தார். டொன் பொஸ்கோ உயர் பாடசாலையின் football பயிற்றுவிப்பாளரான இவர் சம்பிரதாய மணங்களுக்கு ஆதரவாகத் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துரைத்திருந்தார்.

ஜோ பன்ரலோன் (Joe Pantalone)
2003 முதல் டேவிட் மில்லரின் பதில் முதல்வராகக் கடமையாற்றி வந்திருக்கும் பன்ரலோனுக்கு 29 வருடம் நகரசபையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. Toronto Hydro Electric System எனப்படும் ரொரொன்ரோவுக்கான மின்வழங்கல் சபையின் இயக்குனராகவும், Exhibition Place ன் அவைத்தலைவராகவும் இவர் டேவிட் மில்லரின் பணிப்பின் பேரில் பணியாற்றி வந்தார். ட்ரினிற்றி-ஸ்படினா தொகுதியின் நகராட்சி மன்ற உறுப்பினராக 1980 ல் ”ட்ரினிற்றி பெல்வூட்ஸ் மற்றும் லிற்றில் இத்தாலி” தொகுதியிலிருந்து தெரிவான காலம்தொட்டு இவர் ஒரு நகரசபை உறுப்பினராக இருந்துவந்திருக்கிறார்.

நகரபிதாத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியதிலிருந்து பலதரப்பட்ட விடயங்களில் தமது முரண்பாடுகள் மற்றி இவர்கள் மூவரும் எடுத்துரைத்து வந்திருந்தார்கள், சம்பிரதாயத் திருமணங்கள் தொடரில் போர்ட்டின் ஆதரவு உட்பட. மூட்டைப் பூச்சிகளை ரொரொன்றோ சமூக வீடுவழங்கல் திட்டத்தின் கீழுள்ள வீடுகளிலிருந்து அழிப்பது போன்ற சின்னச் சின்ன ஆனால் நடைமுறைக்கு மிகவும் சாத்தியமும் மக்கள் ஆதரவும் பெற்ற வாக்குறுதிகள் மூலம் போர்டுக்கு ஆதரவு கூடிக்கொண்டிருந்த போதும், கருத்துக்கணிப்புகள் எப்போதும் வெல்வதில்லை என்பதை ஸ்மிதமனின் ஆதரவாளர்கள் அடிக்கடி சுட்டிக்கொண்டிருந்தார்கள். பன்ரலோனின் மூன்றாம் இடம் வாக்குப்பதிவுக்கு பல வாரங்கள் முன்னதாகவே உறுதியாகிவிட, போர்ட் எதிர் ஸ்மிதமன் என்கிற இரு முனைப் போட்டிக்கான (அல்லது மும்முனைப் போட்டியின் இறுதிப்போட்டி என்போமே) நாட்கள் எண்ணப்படுகையில் ‘ரொரொன்ரோவில் குடியேறும் மூன்றாம்நிலை நாடுகளின் பிரசைகள்’ எனக் கொச்சைப்படுத்தப்பட்ட இரு சமூகங்களிலிருந்து ஸ்மிதமனுக்கு எதிரான எதிர்ப்புகள் கிளம்பின.

முஸ்லிம்கள் ஸ்மிதமனுக்கு வாக்களிக்க வேண்டுமா?- சர்ச்சை-1
Danforth மற்றும் Beaches பகுதிகளில் ஸ்மிதமனின் தேர்தல் பதாகைகளில் ஸ்மிதமன் மற்றும் அவரது துணைவர் பலேஸோவின் படங்களுடன் “Should muslim vote for him who married a man?" என்ற வசனங்களைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்களை யாரோ ஒட்டியிருந்தார்கள். இதுவே ஸ்மிதமனின் பாலியல் தேர்வு தொடர்பில் மதம், கலாசாரம் ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி ஒரு குழு எழுப்பிய முதல் பிரச்சினை அல்லது சர்ச்சை.

CTBC விளம்பரமும் விளைவுகளும்-சர்ச்சை-2
இந்நிலையில் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒரு விளம்பரத்தை ஒலிபரப்பியது. அது பின்வருமாறு அமைந்திருந்தது

நபர்-1: மணியண்ணை மேயர் எலக்சனில யாருக்கு உங்கட வோட்டுக்கள்?
நபர்-2: ஹா ஹா.. என்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு ஒரு சமயம், கலாச்சாரம் எண்டு இருக்கு. றொப் போர்ட்டை எடுங்கோ. அவற்ற மனிசி ஒரு பெம்பிளை. அது மட்டுமில்லை, வீடு வாங்கேக்கை மாற்று வரி மற்ற வரிகளைக் குறைப்பாராம்
நபர்-1: அப்ப இமிக்கிறேசன்?
நபர்-2: ஹா ஹா ஹா.. அது பெடரல் கவர்மன்ற் விஷயம். வெள்ளையளின்ர வோட்டை எடுக்கவாக்கும்.
நபர்-1: நானும் றொப் போர்ட்டுக்குத்தான் போடப்போறன்
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)



மேற்படி 35 செக்கன்கள் போகிற அந்த விளம்பரத்தின் சர்ச்சைகள் இரண்டு. ஒன்று, ஸ்மிதமனின் பாலியல் தேர்வு தொடர்பிலான கிண்டல் (றொப் போர்ட்டின் மனைவி பெண்), இரண்டாவது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை அவர்களின் தோலின் நிறம் கொண்டு குறிப்பிடுதல் (வெள்ளையள்). இந்த இரண்டுவிதமான அத்துமீறல்களையும் உள்ளடக்கிய இந்த விளம்பரத்தை எந்தவிதமான பிரக்ஞையும் இன்றி கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பியது. கூடவே இது தொடர்பான சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டது.

Miracle Family Temple என்ற தேவாலயத்தின் சார்பில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சி ஒன்றின் இடையிலேயே இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அந்தத் தேவாலயத்துக்கும் இந்த விளம்பரத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் கிளம்பியபோதும், தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரி டேவிட் லோகநாதன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். அதே வேளை வானொலி நிர்வாகம் இந்த விளம்பரத்துக்கு மேற்படி தேவாலயமே முழுப்பொறுப்பு என்று கூறியது. றொப் போர்ட்டின் பிரசார ஒழுங்கமைப்பாளர் இந்த விளம்பரத்துக்கும் போர்ட்டின்  பிரசாரங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மறுத்திருந்தார். ஸ்மிதமன் இந்த விளம்பரத்தையிட்டான தன்னுடைய விசனத்தையும் கோபத்தையும் வெளிப்படையாகவே காட்டியிருந்தார். கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நல்லகாலம் இந்த விளம்பரப் புழுதியை அடுத்த நாள் போர்ட் பெற்ற பாரிய வெற்றி அமுக்கிவிட்டது. இதுவே இன்னும் ஒரு கிழமை முன்னர் வந்திருந்தால், நிலமை மோசமாகியிருக்கலாம்.

CTBC ஏன் கண்டிக்கப்பட வேண்டும்?
கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விளம்பரங்களை ஒலிபரப்புவதையோ, அந்த விளம்பரங்கள் மூலம் உழைப்பதையோ தவறு என்று யாரும் வாதிட முடியாது. ஆனால், இந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தை ஒலிபரப்பியதன் மூலம் அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதுதான் கேள்வி. ’மூன்றாம் உலகநாடுகளில் இருந்துவந்த, மூடநம்பிக்கைகளாலும் பிற்போக்குத்தனங்களாலும் பீடிக்கப்பட்ட பொருளாதார அகதிகள்’ என்கிற ‘நல்ல’பெயரை தமிழ்சமூகத்துக்கு வாங்கித்தந்ததைவிட எதையும் சாதிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் இருக்கிற தற்பால் உறவாளர்களைக் காயப்படுத்தியதைவிட வேறெதையும் சம்பாதிக்கவுமில்லை. இதைவிட, ஏதாவது ஒரு காலத்தில் எங்கள் மீதான இனவெறித்தாக்குதல் என்று ஏதாவது நடந்தால், அப்போது ‘நீங்களும் இனவெறிக்குறியீடுகளைப் பாவித்தவர்கள்தானே?’ என்று யாராவது கேட்டால் பல்லிளித்தபடி அடிவாங்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே குழந்தைகளை முன்னுக்கு விட்டு நெடுஞ்சாலையில் செய்த மறியலால் கோபமாயிருக்கிற கனேடிய பெரும்பான்மை நடுத்தரவர்க்கம் இன்றைக்கு தங்களை ‘வெள்ளைகள்’ என்று அழைத்ததையிட்டு மேலும் கோபமாகியிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் பெரும்பான்மை நடுத்தரவர்க்கம் ஒன்றும் புனிதமானது அல்ல. இருந்தபோதும், நிறத்தின் அடிப்படையில் ஒரு குழுவை இப்படியாக ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதாக எனக்கு நினைவில்லை.

தற்பாலினர் பற்றி எம்மத்தியில் இருக்கக்கூடிய மலினமான கருத்துக்களே இவர்கள் ஸ்மிதமனின் பாலியல் தேர்வுபற்றி போகிற போக்கில் நக்கல் செய்துவிட்டுப்போகக் காரணமாகியிருக்கிறது. தற்பால் உறவுகளை வெறும் பாலியல் வேட்கை சார்ந்த உறவுகளாகவே பார்க்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டைக் கிட்டத்தட்ட எல்லா சமூகங்கள் மீதும் வைக்கலாம். தற்பால் உறவுகளில் 99.99 சதவீதத்தில் சம்பிரதாய உறவுகளில் இருக்கிற அத்தனையும் இருக்கிறது. அவர்களின் ஊடல் இருக்கிறது, சின்னச்சின்ன சண்டைகள், சந்தோசங்கள் இருக்கின்றன, மற்றவர்மீதான அக்கறை இருக்கிறது, எல்லாமே இருக்கிறது. ஏன், பொறாமை இருக்கிறது. சினேகிதன் அமைப்பைச் சேர்ந்த டான்ஸ்ரன், விஜெய் மற்றும் சிவா ஆகியோரிடம் கருப்பி எடுத்த நேர்காணல் என்னைப் பொறுத்தவரை எங்கள் சமூகத்தில் பலர் படிக்கவேண்டிய ஒன்று. எங்கள் சமூகங்களில் தற்பால் உறவுகள் இல்லை என்கிற பொய் விம்பமும், அதே போல் இதெல்லாம் வெளிநாட்டுக்கு வந்த இளஞ்சந்ததி செய்த ‘கலாசாரச் சீரழிவு’ என்று சொல்பவர்களும் வாசிக்கவேண்டிய நேர்காணல் அது. அதே போல், ‘ஸ்லம் டோக் மில்லியனர்’ என்ற புழுதிக்குள் மூழ்கிப்போன ‘மில்க் (Milk)'  என்ற படம் பார்க்கப்படவேண்டிய ஒன்று. சம்பிரதாயத் திருமண அல்லது காதல் உறவுகள் எப்படி 24 மணிநேரமும் பாலியல்வேட்கையில் திளைத்திருப்பதில்லை என்பது உண்மையோ, அந்தளவுக்கு உண்மை தற்பாலின உறவுகளிலும் பாலியல் வேட்கை என்பது ஒரு பொருட்டே இல்லை என்பது.

சரி, இது தொடர்பான புரிந்துணர்வு வரக் காலமெடுக்கும், எவ்வளவோ காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த கலாசாரத்தை இலகுவில் உடைக்கமுடியாது என்றுவேண்டுமானால் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏதாவது காரணங்களைச் சொல்லலாம். ஆனாலும், ஸ்மிதமனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு வேறெந்தக் காரணமுமே இல்லையா? ஸ்மிதமனின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் ரொரொன்றோ நகர்வாசிகளின் பிரச்சினையை மையப்படுத்தியே இருந்தன. புறநகர்வாசிகளின் பிரச்சினைகள் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறைவாகவே இருந்தன. அதைவிட புதிதாக ஒன்ராரியோ மாகாணத்தில் கூட்டு வரித்திட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முதல்வர் டால்ற்றன் மக்குய்ன்ரி (Dalton McGuinty) அறிமுகம் செய்தபோது, அவருக்கு வலக்கரமாக நின்று செயற்பட்டவர் ஸ்மிதமன். இப்படி அவரது அரசியல் செயற்பாடுகளூடாக விமர்சிக்க எவ்வளவோ இருக்க, அவரது பாலியல் தேர்வை வைத்து நக்கலடிக்க எந்தவிதமான அவசியமும், உரிமையும் இவர்களுக்கு இருந்திருக்கவில்லை. Oral Sex எனப்படும் வாய்மூல உடலுறவு எங்கள் சமூகத்தில் இல்லை என்று பலர் வாதிடக் கேட்டிருக்கிறேன். என்னால் இருக்கிறது என்று வாதிட முடிவதில்லை. காரணம், நான் யாருடைய படுக்கையறையையும் எட்டிப்பார்க்கவில்லை. எட்டிப்பார்த்த கெட்டிக்காரர்கள்தான் இல்லை என்று வாதிடுவார்கள் என்பது என் எண்ணம். அதே போல், ஸ்மித்மன் தன்னுடைய படுக்கையறையில் என்ன செய்கிறார் என்பது எங்களுக்கு அவசியமில்லாதது. அப்படி அவசியமில்லாத விஷயத்தில் தலையை நுழைத்த கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டிக்கவேண்டியது அவசியமாகிறது.

இரண்டாவதாக இவர்கள் பாவித்த ‘வெள்ளையள்’ என்கிற சொல். உண்மையைச் சொல்லப்போனால் நிறத்தை வைத்தும் இனத்தை வைத்தும் பழிப்பதில் எங்களை மிஞ்ச யாருமில்லை. வெள்ளை, கறுப்பு, கறுவல், காப்பிலி, சப்பட்டை, வடக்கு என்று எங்களுக்குள் எத்தனையோ இனவாதச் சொற்கள் வாழ்ந்துகொண்டிருப்பதை மறுக்கமுடியாது. இப்படியான சொற்களைப் பாவித்து எந்த ஒரு இனக்குழுமத்தையும் அழைப்பது இனரீதியான துஷ்பிரயோகம். இதேபோன்ற சொற்களை வைத்து கனேடியப் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்களை அழைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதையும் யாரும் மறுத்துவிடலாகாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரபலங்கள் என அழைக்கப்படுகிற பலர் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இருந்தபோதும், ஒரு இலத்திரனியல் ஊடகத்தில், தேர்தல் பிரசாரத்துடன் சம்பத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரத்தில் இப்படியான இனவாதச் சொல் பயன்படுத்தப்பட்டதாக நான் கேள்விப்படுவது இதுவே முதன்முறை. இணைய விவாத மன்றங்கள் பலவற்றில் இந்த விளம்பரத்தில் தற்பாலினர் மீது பாவிக்கப்பட்ட வன்முறையை விட, இந்தச் சொற்பிரயோகம்தான் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் Canadian Radio-television and Telecommunication Commission (CRTC) நடவடிக்கை எடுக்கவிருப்பதாக செவிவழிச் செய்திகள் மூலம் அறியக்கூடியதாய் இருக்கிறது.

பொறுப்பேற்பது யார்?
இந்த அராஜகத்துக்கு யார் பொறுப்பேற்பது என்பதுதான் இப்போது பிரச்சினை. சரி, தங்களளவில் சரி என்று நினைத்து ஒலிபரப்பிய இந்த விளம்பரத்துக்குப் பொறுப்பேற்பதில் CTBC பயங்கரமாகப் பின்னிற்கிறது. வானொலி நிர்வாகம் பாதிரி லோகநாதனையும், பாதிரி நிர்வாகத்தையும் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாதிரியின் பொறுப்பிலிருக்கிற தேவாலயம் சார்பிலான நிகழ்ச்சியில் இந்த விளம்பரம் ஒலிபரப்பானது என்கிறபடியால் பொறுப்பை இலேசில் தட்டிக்கழிக்க முடியாது. அதேவேளை ‘கட்டணம் கிடைக்கிறது’ என்பதற்காக எந்தக் குப்பையை வேண்டுமானாலும் ஒலிபரப்பிவிடுவதா என்பது வானொலி நிர்வாகம் மீதான கேள்வியாக அமையும். இதிலும் இளையபாரதிக்குத் தெரியாமல் இந்த விளம்பரத்தை ஒலிபரப்பிவிட்டார்கள் என்றொரு பகிடி வேறு. கொஞ்சக்காலத்துக்கு முன்னர் ‘ஸ்மிதமன் ஒரு அலியாக இருந்தாலும் அவரை நாங்கள் அவரது அரசியலுக்காக ஆதரிக்க வேண்டும்’ என்று இதே வானொலி நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்கள். தற்பாலினர்-மூன்றாம்பாலினர் ஆகியோரையே வித்தியாசப்படுத்திப் பார்க்கமுடியாத, அல்லது பார்க்கிற அளவுக்கு தன்னைச் சுற்றியிருக்கிற சமூகம் பற்றிய அக்கறையில்லாத இவர்கள் தமிழ் இனக்குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று பெயர் வைத்திருப்பது நகைப்புக்குரியது. இந்தளவுக்கு உலகம் பற்றிய புரிதல் இல்லாமல் இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் யாருமில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவேண்டும். இளையபாரதிக்குத் தெரியாமல், கட்டணம் செலுத்தி இளையபாரதியைத் திட்டி ஒரு விளம்பரத்தை நான் ஒலிப்பதிவு செய்து தந்தால், அதையும் ஒலிபரப்புவார்களா என்ன? அதைவிட மோசம், இது பற்றி மற்றைய ஊடகங்கள் பெருமளவில் கவனம் செலுத்தாமைதான். ஆகக்குறைந்தது ‘கவிழ்ந்தான் போட்டிக்காரன்’ என்ற மனநிலையில்கூட இவர்கள் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டிக்கவில்லை. கனேடிய தமிழர் பேரவை என்கிற பெயரில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக நடந்துகொள்கிறவர்கள் கூட அவர்களின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை சொன்ன , “This is completely unacceptable" என்கிற வசனம் தவிர உருப்படியாக வேறொன்றும் சொன்னதாகத் தெரியவில்லை. அவர்களிடமும் எதையும் எதிர்பார்க்க முடியாது. அருண்மொழிவர்மனும் நானும் இவர்களின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி திருடப்பட்டது தொடர்பிலான சந்தேகங்களுக்காக டேவிட் பூபாலபிள்ளையைத் தொடர்புகொள்ள முயன்று களைத்தாயிற்று. அவரது முகம் வரக்கூடிய முன்னணி ஊடகங்களுக்கு மட்டும்தான் டேவிட் பூபாலபிள்ளை பதில் சொல்வாராம். கேவலம் தேடிச் சோறுநிதம் தின்று வாழ்கிற பிச்சைக்காரத் தமிழ் Blogger களுக்கு பதிலளிக்குமளவுக்கு அவர்கள் என்ன தரம்தாழ்ந்தவர்களா என்ன? அதே மனநிலை CTBC க்கும் இருக்கிறது. தொலைபேசிப் பெட்டிப்பக்கம் யாருமே வருகிறார்களில்லை. வந்த ஒருவரும் ‘அண்ண, அந்த ஸ்மிதமன் விளம்பரம்...’ என்று ஆரம்பிக்க அறைந்து சாத்திவிட்டுப் போகிறார்.

கண்டனம்
இது தொடபில் ஒரு கண்டனக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான அறிவிப்புக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தக் கண்டனக் கூட்டத்தில் CTBC அலுவலகத்துக்கு முன்னாக ஒரு சிறிய கண்டனப் பேரணி செய்வதற்குரிய விண்ணப்பத்தை வருகிறவர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று இளங்கோவோடு பேசியிருக்கிறேன். சின்னதாக ஒரு கண்டன அறிக்கையை CTBC க்கும் மற்றைய ஊடகங்களுக்கும் தருகிற (தமிழ், ஆங்கிலத்தில்) ஒரு எண்ணம் இளங்கோவுக்கு இருக்கிறது. அந்த சிறிய கண்டனப் பேரணி தொடர்பிலான முயற்சிகள் சரிவந்தால், நான் பிடிக்கப்போகிற பதாகையில் I am a Queer என்கிற வாசகம் இருக்கும். ஆர்வமுள்ள இளம் தலைமுறையினர் இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து CTBC போன்ற ஊடகங்களின் அவமானகரமான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கிற முயற்சியில் இணைவீர்கள் என நம்புகிறேன்.
 


Comments

katsura

10/31/2010 10:02:14 pm


ctbcக்கான எதிர்வினை
http://www.matrathu.com/2010/10/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE/

 

ரமேஷ்

11/01/2010 12:25:02 am

ண்ணா உங்கள் முயற்சிக்கு நாங்கள் ஆதரவு நிச்சயம் தருவோம்.

 

கிருத்திகன்

11/01/2010 4:10:36 pm

நன்றி ரமேஷ் மற்றும் கற்சுறா

 

கன்கொன்

11/01/2010 11:36:41 pm

பதிவுக்கு நன்றி.
ஆங்காங்கே இதைப் பற்றி அறிந்திருந்தாலும் முழுமையாக அறிந்துகொண்டேன்...
கண்டனப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

 



Leave a Reply

    இதுவரை கிறுக்கியவை

    November 2011
    January 2011
    December 2010
    October 2010
    September 2010

    வகைகள்

    All
    இற்றைப்படுத்தல்
    பொதுவெளி
    தற்பாலினர்
    அரசியல்
    அறிவுஜீவிகள்
    ரொரொன்ரோ
    அயோக்கியத்தனம்
    நகரபிதா
    சினிமா
    கல்வி
    தேர்தல்
    கனடா
    டேவிட் பூபாலபிள்ளை
    கனேடியத் தமிழர் பேரவை
    கண்டனம்
    சமூகநீதி
    இளையபாரதி
    அறிவுஜீவி
    Ctbc
    சமூகம்
    ஊடகங்கள்
    எதிர்வினை
    சாதியம்
    கமல்ஹாசன்

    RSS Feed