இன்னாத கூறல்
  • பத்திகள்
  • இலக்கியம்-பகிர்வுகள்
  • களம்
  • இவன்...
கனேடிய தமிழர் பேரவை உடைப்பும் கணனித் திருட்டும் 09/19/2010
1 Comment
 
கனேடியத் தமிழர் பேரவையின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணனி ஒன்று களவாடப்பட்டது தொடர்பில் பெருமளவுக்கு எங்கள் ஊடகங்கள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அருண்மொழிவர்மனின் பதிவொன்றின் மூலமாகவே இந்தச் செய்தி எனக்குத் தெரியவந்தது. அதுவும் கனேடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரான திரு டேவிட் பூபாலபிள்ளை முதலில் வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்க்கும்போது இது நிச்சயமாக முதனிலை ஊடகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய செய்தியாகவே இருந்திருக்கவேண்டியது. ஆனால் அதன் பின்னர் திரு. பூபாலபிள்ளை அடித்த குட்டிக்கரணங்களைப் பார்க்கும்போது ஊடகங்கள் புதுக்கடைத் திறப்புவிழாவுக்குப் போயிருந்தது நியாயமானதொரு செயலாகவே எனக்குத் தெரிகிறது.

டேவிட் பூபாலபிள்ளை முதலில் வைத்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. சென்ற ஆவணி 13 சன் சீ கப்பல் மூலமாக வந்திறங்கிய அகதிகள், மற்றும் இலங்கையில் இருக்கக்கூடிய அவர்களின் உறவினர்கள் பற்றிய அந்தரங்கத் தகவல்கள் அடங்கிய கணனி ஒன்றின் வன்தட்டு நினைவகம் (Hard Disk) களவாடப்பட்டிருப்பதாயும், போர்க்குற்றங்கள் பற்றிச் சாட்சியமளிக்க இந்த அகதிகள் முன் வந்திருப்பதைத் தடுக்கும் நோக்கில் ஏதாவது மிரட்டல்களை அவர்களுக்கோ அவர்களின் உறவினர்களுக்கோ விடுக்கும் நோக்கில் இலங்கை அரசின் கைக்கூலிகளாலேயே இந்தத் திருட்டு நடத்தப்பட்டது என்றுதான் முதலில் டேவிட் பூபாலப்பிள்ளை சொல்லியிருந்தார். ஏறத்தாள 300 பேரின் விபரங்கள் அந்த வன்தகட்டில் இருந்ததாகச் சொன்ன பூபாலப்பிள்ளை தனது அடுத்த அறிக்கையில் ஒரு சில பேரின் விபரங்கள் மட்டுமே இருந்ததாகச் சொன்னார். அதன் பின்னர்,அப்படி எந்த விபரமுமே அதில் பதியப்படவில்லை என்று கூறியிருக்கிறார். ஏன் இப்படி அவசர அவசரமாக மாற்றி மாற்றிப் பூபாலபிள்ளை சொன்னார் என்பதுதான் இது பற்றி நான் பேசிய பலரிடம் இருக்கிற கேள்வி. பூபாலபிள்ளை பக்கமிருந்து வரக்கூடிய ஒரேயொரு நியாயமான பதில் ‘இவ்வளவு பேரின் விபரங்கள் தொலைந்தன என்று சந்தேகிக்கிறோம்' (Alleged theft of, Apparent theft of...) என்றுதான் பத்திரிகைகள் அவர் சொன்னதாகச் சொல்லியிருக்கின்றன என்பதாகவே இருக்கமுடியும். அப்படி ஒரு சமாளிப்பான பதிலைச் சொல்லிக்கூட டேவிட் பூபாலபிள்ளை தன்னுடைய முன்னுக்குப் பின்னான அறிக்கைகளை நியாயப்படுத்தாமல் போனது இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகங்களைப் பல தரப்புகளிடமும் எழுப்பலாம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எழக்கூடிய மிகச் சிக்கலான பிரச்சனை அந்தரங்கத் தகவல்கள் தொடர்பானது. கனடாவில் அகதிநிலை கோரியவர்கள் பற்றிய மிகவும் அந்தரங்கமான தகவல்கள் பற்றிய ஒரு பிரச்சினை என்பது நேரடியாகக் கனேடிய மத்திய அரசாங்கத்துடன் சம்பந்தப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஒரு மாணவனின் பெறுபேற்றை அவனே தொலைபேசி மூலம் அறிந்து கொள்வதையே தடுக்கிற ஒரு நாட்டில், அந்தரங்கத் தகவல்கள் பற்றிய பிரச்சினை இலகுவானதொன்றல்ல. Social Insurance Number ஐ வைத்துத் திருட்டுச் செய்பவர்களும் இருக்கிறார்களே? அவர்களை இந்தச் சட்டம் தடுத்ததா? என்ற விதண்டாவாதங்களைக் கடந்து, அகதிக் கோரிக்கையில் உள்ளவர்களின் அந்தரங்கத் தகவல்கள் உண்மையாகவே கனேடியக் குடிவரவு/குடியகல்வுத் திணைக்களத்தால் மிகவும் அந்தரங்கமாகவே பேணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில், இந்த இரகசியத் தகவலகளை எங்ஙணம் தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது? என்பது முதல் கேள்வி. கனேடிய தமிழர் பேரவைதான் இந்த அகதிகள் விடயத்தில் முன்னின்று செயற்பட்டு வருகிறது. ஆகவே அந்த அகதிகளிடம் நேரடியாகவே இந்த விடயங்களை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்கிற பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. ஆனால், அவர்களின் அலுவலகத்தில் ஒரு திருட்டு நடந்திருக்கிறது என்றதும் முந்தியடித்துக்கொண்டு பூபாலப்பிள்ளை கொடுத்த பேட்டிகளும், அதன் பின்னர் அவர் செய்கிற சமாளிப்புகளும் எங்கேயோ ஏதோ பிழையிருக்கிறது என்கிற ஒரு சந்தேகத்தை எழுப்புவது துரதிருஷ்டவசமானது. அதிலும் ‘சிங்கள அரசின் கைக்கூலிகள்’ என்கிற ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்திய பின்னரும் இந்த விடயத்தில் தமிழ் ஊடகங்களின் மௌனம் புரியாத புதிராகவே இருக்கிறது. அகதிகளை வைத்து அரசியல் பண்ணுகிற ஒரு முயற்சியாக இது இருந்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய அவாவாயிருக்கின்றது. சர்வசாதாரணமாக 300 பேரின் அந்தரங்க விபரங்கள் இருந்தன என்றும், பின்னர் அவ்வளவு இருக்கவில்லை என்றும், ஒருவரின் விபரம் இருந்தால் என்ன, 100 பேரின் விபரம் இருந்தால் என்ன திருட்டு திருட்டுத்தானே என்றும் சொல்லாமல் இதுபற்றிய ஒரு முழுமையான அறிக்கை ஒன்றை கனேடியத் தமிழர் பேரவை வெளியிடவேண்டும்.

இந்த விடயத்தில் பூபாலபிள்ளை உடனுக்குடன் வைத்த குற்றச்சாட்டின் நேர்மையைச் சந்தேகிக்க வேண்டியதாய் உள்ளது. ’சிங்கள அரசின் கைக்கூலிகள்’ என்கிற வார்த்தைகள் மக்களைத் தூண்டிவிட்டு தங்களது இருப்பைக் காட்டும் முயற்சியாகக்கூட இருக்கலாம். அதாவது, இந்தத் திருட்டு ஒரு நாடகமாகக்கூட இருக்கலாம். அப்படி இல்லை என்றால், அந்தக் கைக்கூலிகள் தமிழர் பேரவையோடு ஒட்டி உறவாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள், அந்தரங்கக் கோப்புகள் எந்தக் கணனியில் பாதுகாக்கப்படலாம் என்று தெரிந்திருக்கிற அளவுக்கு. இந்தத் திருட்டு ஒரு நாடகமாக இருந்தால் அது கனேடியத் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்குச் செய்கிற மாபெரும் துரோகம். இதையெல்லாம் இராஜதந்திரம் என்று தயவுசெய்து நியாயப்படுத்தவேண்டாம். இல்லை, இலங்கை அரசின் கைக்கூலிகளின் உட்புகுந்திருந்தார்கள் என்றால் தமிழர் பேரவையை உடனடியாகக் கலைத்துவிடவும். முக்கியமான கோப்புகள் எந்தக் கணனியில் இருந்தன என்று போகிறவன் வருபவனுக்கெல்லாம் தெரிகிறது என்றால், பேரவையின் இருப்பில் அர்த்தமில்லை. ‘அதுதான் எந்த விபரமும் அந்தக் கணனியில் இருக்கவில்லை என்று பூபாலபிள்ளை சொல்கிறாரே? அப்படியானால் அந்தக் கணனியில் விபரம் இருப்பதாக நம்பவைத்து ஏமாற்றியது கனேடியத் தமிழர் பேரவையின் திறமைதானே?’ என்று யாரும் கேட்பீர்களேயானால், என்னுடைய கேள்விகள் வருமாறு:
  • அப்படி ஏமாற்றினார்கள் என்றால் எதற்காக டேவிட் பூபாலபிள்ளை முதலில் அந்தரங்கக் கோப்புகள் களவாடப்பட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்? இப்படியான முக்கியமான விபரங்களை குறிச்சொற்கள் மூலம் மறைத்து வைத்திருப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. அப்படியானால் டேவிட் பூபாலபிள்ளை பதறியடித்துக்கொண்டு ஏன் அறிக்கை ஒன்றை வெளிவிடவேண்டும்?
  • அப்படியானால் டேவிட் பூபாலபிள்ளையையும் சேர்த்துத்தான் ஏமாற்றினார்களா? பேரவைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாத அப்பாவியா டேவிட் பூபாலபிள்ளை? கனேடியத் தமிழர் பேரவையின் முதன்மைப் பேச்சாளரான அவர் மீது பேரவை வைத்திருக்கிற நம்பிக்கை இவ்வளவுதானா? முக்கியமான அமைப்பாகத் தன்னைக் காட்டிக்கொள்கிற கனேடியத் தமிழ்ப் பேரவை தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குகின்ற நபருக்கு, அந்தப் பேரவையின் அடிப்படை நடவடிக்கைகள் பற்றித் தெரியவில்லை என்றால், பிறகு பேரவை எதற்கு?
கனேடியத் தமிழர் பேரவைக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் என்னவென்றால், உடனடியாக இந்தச் சம்பவம் தொடர்பின் ஒரு ஊடக அறிக்கையை வெளிவிடவும். மிக முக்கியமாக, நடந்த விடயங்கள் பற்றி முழுமையாக, எந்த ஒளிவுமறைவுமின்றித் தெளிவுபடுத்தவும். டேவிட் பூபாலபிள்ளையின் முன்னுக்குப்பின் அறிக்கைகள் பற்றிய உங்கள் பக்கத்து நியாயங்களை முன்வைக்கவும். அதுதான் பொறுப்புள்ள ஒரு அமைப்புக்கு அழகு. இல்லாமல் கள்ளமௌனம் சாதிப்பது உங்கள் மீதிருக்கிற கொஞ்சநஞ்ச நல்ல நம்பிக்கைகளையும் சிதைத்துவிடக்கூடும்.
 


Comments

எல்லாளன்

09/19/2010 12:58:45 pm

இந்த சந்தேகங்கள் என்னை மட்டுமல்ல பலரையும் நெருடிக்கொண்டு இருந்தது

நன்றிகள்

 



Leave a Reply

    இதுவரை கிறுக்கியவை

    November 2011
    January 2011
    December 2010
    October 2010
    September 2010

    வகைகள்

    All
    இற்றைப்படுத்தல்
    பொதுவெளி
    தற்பாலினர்
    அரசியல்
    அறிவுஜீவிகள்
    ரொரொன்ரோ
    அயோக்கியத்தனம்
    நகரபிதா
    சினிமா
    கல்வி
    தேர்தல்
    கனடா
    டேவிட் பூபாலபிள்ளை
    கனேடியத் தமிழர் பேரவை
    கண்டனம்
    சமூகநீதி
    இளையபாரதி
    அறிவுஜீவி
    Ctbc
    சமூகம்
    ஊடகங்கள்
    எதிர்வினை
    சாதியம்
    கமல்ஹாசன்

    RSS Feed